Answered by Ansar Thablighi
வினா

அகீகாவிற்காக ஆட்டிற்கு பதிலாக மாட்டை கொடுக்க முடியுமா?

விடை

இதனை பலரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
அகீகா என்பதும் அல்லாஹ்விற்கு நாம் செய்யும் ஒரு வணக்கமாகும்.

எந்த ஓர் வணக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையிலேயே நாம்
செய்வது கடமையாகும்.  அதில் நமது சொந்த விருப்பங்களை அபிப்பிராயங்களை
நுழைவிக்கக் கூடாது.

அப்போதுதான் அல்லாஹ்விடமிருந்து நிறைவான நன்மைகளை பெற முடியும்.

தவறும் பட்சத்தில் பித்அத்தான வழிகேடுகள் உருவாகிவிடும்.

அகீகாவின் விடயத்தில் அறுக்கப்படும் பிராணியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிடும் பொழுது '''ஆடு அறுக்கப்படும்'' (புகாரி) எனக் குறிப்பிட்டார்கள்.
வேறு எந்தப் பிராணியையும் குறிப்பிடவில்லை.

தனது பேரப்பிள்ளைக்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்டையே அகீகாவிற்காக அறுத்தார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் இவ்விடயத்தில் ஆடாகவே
குறிப்பிடப்பட்டுள்ளது.
மாட்டை அல்லது ஒட்டகத்தை அறுத்தால் போதுமாகிவிடும் என்றிருந்தால் நபி (ஸல்)
அவர்கள் வழிகாட்டியிருப்பார்கள்.

உழ்ஹிய்யாவின் விடயத்தில் மாடு ஒட்டகம் குறிப்பிடப் பட்டதைப் போன்று இங்கு
அவை குறிப்பிடப்படவில்லை.

உழ்ஹிய்யாவின் விடயத்தில் கோழியை அறுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள்
வழிகாட்டாததால் ஒருவர் ஆயிரம் கோழியை ஒரு ஆட்டிற்கு ஈடாக அறுத்தாலும் அது
உழ்ஹிய்யாவாகக் கருதப்படமாட்டாது என்பதை நாம் விளங்கிவைத்திருக்கின்றோம்.

இவ்வாறே அகீகாவின் விடயத்தில் மாடு ஒட்டகம் குறிப்பிடப்படாததால் ஆடு மட்டுமே
அகீகாவிற்கு செல்லுபடியானதாகக் கருதப்படும்.

சில அறிஞர்கள் மாடு அறுக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அது
அவர்களின் சொந்த கருத்தாகும். அதற்கு நபிகளாரிடமிருந்து எவ்வித
ஆதாரமுமில்லை.