VIDEO 1
VIDEO 2
FOTO
VIDEO 3
VIDEO 4
VIDEO 5
VIDEO 6
பேருவலை மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆப் பள்ளியில்
நடைபெற்ற
மிலேச்சத்தனமான செயலை வண்மையாக கண்டிக்கின்றோம்.
அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பு (ஐயுவு) யின் கண்டன
அறிக்கை

பேருவளை, மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆப் பள்ளி வாசலில் 24.07.2009 சனி
இரவு நடைபெற்ற மிலேச்சத்தனமான கொலைகளையும் வன்முறைகளையும் அகில
இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பு (ஐயுவு) மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்பாவிப் பொது மக்களில் இரு உயிர்களைக் காவு கொண்ட, 20க்கும்
மேற்பட்டவர்களை கூரிய ஆயுதங்களால் படுகாயமடையச் செய்த, புனித பள்ளி
வாசலையும் புனித அல்குர்ஆன்களையும் எரித்த இச்செயல்கள் யாவும்
மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான செயலாகும். மனிதாபிமானமுள்ள எந்த ஒரு
மனிதனும் இச்செயலைச் செய்ய மாட்டான். இவர்களில் ஐவரின் நிலமை மிகவும்
கவலைக்கிடமாகவுள்ளது. குறித்த பள்ளி வாசல் மாட்டு மடுவம் போல் இரத்தம்
நிறைந்து காணப்பட்டது. கொலைகாரர்கள் அல்லாஹ்வின் புனித பள்ளி
வாசலுக்குள் இவ் அராஜகங்களை அரங்கேற்றியிருப்பது வெக்கித்து தலைகுனிய
வேண்டியதொரு விடயமாகும்.

இங்கு மிகவும் வேதனையோடு கூற விரும்பும் முக்கிய சில விடயங்கள்
பின்வருமாறு:

1-        குறித்த தினம் மாலை 7 மணியளவில் காடையர் கூட்டமொன்று பள்ளி
வாசலுக்குள் புகுந்து பள்ளி வாசலின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து
விட்டுப் போயுள்ளனர். இவ்விடயடமாக பொலிசாருக்கு உடனே தகவல்
கொடுத்தும் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
மீண்டும் வன்முறைகள் நடக்கலாம் எனவே குறித்த பிரதேசத்தில்
பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரி பொலிசில் பல முறைப்பாடுகள் செய்தும்,
தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும்
மேற்கொள்ள வில்லை.
2-        குறித்த தினம் நள்ளிரவுக்குப் பின் காடையர்கள் கூரிய ஆயுதங்களுடன்
பள்ளி வாசலைத் தாக்க வருகிறார்கள் என்ற விடயத்தை பொலிசாருக்கு
அறிவித்தும் பொலிசார் பராமுகமாக இருந்து விட்டனர். அனைத்து
காடைத்தனங்களும் அரங்கேரியதற்குப் பிறகு தான் அங்கு பொலிசார் வருகை
தந்தனர். எனவே மேல்மட்ட ஒரு சிலரின் உத்தரவுக்கமைய பொலிசார்
செயற்படாமல் இருந்துள்ளனர் என மக்கள் சந்தேகிக்கின்றனர். எது
எவ்வாறிருப்பினும் பொது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிசாரே பக்கச்
சார்பாக நடந்து கொண்டது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அத்துடன்
நீதியைத் தேடி காவல் துறையினரிடம் மக்கள் சென்றும் பலனில்லையெனக் கருதி
அவர்களும் வன்முறைகளில் இறங்கலாம் இறுதியில் இரத்த ஆறு தான் ஓடும்.
100க்கும் மேற்பட்டவர்கள் பேருவளை, பலப்பிட்டிய, காலி போன்ற
நகரங்களிலிருந்து மஹகொடைக்கு வந்து வெறியாட்டம் நடாத்தி விட்டு
தப்பிச் சென்றுள்ளார்கள் என்றால் பாதுகாப்புத் தரப்பினர் என்ன செய்து
கொண்டிருந்தனர்?
3-        அனைத்து ஊடகங்களிலும் கூறப்பட்ட செய்திகள் யாவும் பொய்யானதும்,
திரிபு படுத்தப்பட்டதுமாகும். அதாவது ஊடகங்களில் 'பேருவளை, மஹகொடவில்
இரு முஸ்லிம் மதக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் பலி,
பலர் படுகாயம்' என செய்திகள் வெளியிடப்பட்டது. இது எவ்வித
அடிப்படையுமற்ற உண்மைக்குப் புரம்பான செய்தியாகும். உண்மையில் இரு மதக்
குழுக்களுக்கிடையில் எவ்வித மோமல்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவே
நடைபெறவில்லையென்பதே உண்மை. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையால் பூரண
அங்கீகாரம் வழங்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரின் பள்ளி வாசலை காடையர்
குழுவொன்று சம்பவ தினத்தன்று மாலை ஏழு மணிக்கும்,
பின்னர் நள்ளிரவிலும் வந்து அப்பாவிகளாக, நிராயுதபாணிகளாக இருந்த
மக்களை வெட்டியும், கொலை செய்தும், புனித பள்ளி வாசலையும், புனித
குர்ஆனையும் தீக்கிரையாக்கியும் தங்களது காடைத்தனங்களை அரங்கேற்றியது
காடையர் குழுவொன்று. மாறாக இரு மதக் குழுக்களுக்கிடையில் மோதல்
நடைபெற்றுத் தான் உயிர்பலிகளும், காயங்களும், பள்ளி வாசல் மற்றும்
குர்ஆன் எரிப்புகளும் நடை பெறவில்லை. சுருங்கக் கூறின் எவ்வித
மோதல்களும் நடைபெறாமலே சும்மா இருந்த அப்பாவி மக்கள் கொடூரமாகத்
தாக்கப்பட்டனர். பத்து வயது சிறுவனைக் கூட இப்பாவிகள் விட வில்லை.
அச்சிறுவனை ஈவிரக்கமற்ற முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவன்
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப்
பார்த்த எந்தக் கண்களும் கண்ணீர் வடிக்காமல் வரவில்லை.

செய்திகளை எவ்விதப் பக்கச்சார்பின்றியும், திரிபுபடுத்தாமலும்
அப்படியே வெளியிடுவது தான் ஊடக தர்மம். ஊடகங்களின் இவ்வாறான பொய்ப்
பிரச்சாரங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

4.        இவ்வன்முறையைக் கட்டுப்படுத்த எமது முஸ்லிம் தலைவர்களுக்கும்
அமைச்சர்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல
தரப்பினராலும் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் யாரும்
பதிலளிக்க வில்லை. (அமைச்சர் பவுசியைத் தவிர) சம்பவ இடத்துக்கு சென்று
பார்வையிடவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவோ,
கண்டிக்கவோ இந்த முஸ்லிம் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்னும் நேரம் கிடைக்காதது
வேதனையான விடயம். சம்பவ தினத்தன்று அதிகாலை 2.30 மணிக்கு அமைச்சர்
பவுசிக்கு மாத்திரம் தொடர்பினை ஏற்படுத்த முடிந்தது. உடனே அவர்
பொலிசாருடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்தார்.
5.        அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்,
முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம், முஸ்லிம் சமாதானக் குழு, முஸ்லிம் பள்ளி
வாசல் சம்மேளனம், ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரக் குழு, முஸ்லிம்
மீடியா போரம் என்றெல்லாம் முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப்பத்தும்
அமைப்புகள் இருந்தும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளையும்
எடுக்கவோ சம்பவ இடத்தைச் சென்று பார்வையிடவோ, இம்மிலேச்சத்தனமான
செயலைக் கண்டிக்கவோ முன்வராதது மிகவும் வேதனைக்குரிய விடயமே!

ஜனாதிபதி அவர்கள் கூட ஒரு முஸ்லிம் அமைச்சரை 26.07.2009 அன்று அழைத்து உடனே
பேருவளைப் பகுதிக்குச் சென்று நிலமைகளை நேரில் அவதானித்து உரிய
நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்திருந்தாராம். குறித்த அந்த
அமைச்சரோடு அதே தினம் மாலையில் நான் தொடர்பு கொண்டு மஹகொடை விடயமாக
உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் உங்களைப்
பணித்துள்ளாராம். ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டீர்களா என
வினவியபோது நான் இன்னும் அந்தப் பக்கம் போக வில்லை, நாளைக்குத் தான்
(அதாவது27.07.2009) போகப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு நான்
தற்போது பிஸியாக உள்ளேன் பிறகு பேசுவோம் என தொலைபேசியைத் துண்டித்து
விட்டார். இது தான் முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பேச
பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்பிய எமது பிரதிநிதிகளின் நிலை???

எது எவ்வாறிருந்தாலும் இன்று முஸ்லிம்களின் இரு உயிர்கள் பலியாகி 20
பேர் படுகாயமடைந்து, பள்ளி வாசல் எரிக்ப்பட்டு வேதனையோடு
இருக்கின்றனர் முஸ்லிம்கள். சிறிதளவேனும் மனித நேயமுள்ள யாரும் இம்மகா
பாவத்தை செய்ய மாட்டான், அத்தோடு சிறிதளவேனும் மனித நேயமுள்ள யாரும்
இம்மகாச் செயலைப் பார்த்துக் கொண்டு தடுக்காமல் இருக்கவும் மாட்டான்.
மனித நேயமுள்ள யாரும் இம்மகா பாவத்தை கண்டிக்காமல் இருக்கவும் மாட்டான்.

எனவே இப்பெரும் பாவத்தை அரங்கேற்றிய காடையர்களையும், அவர்களைத் தூண்டிய
முக்கிய நபர்களையும் பொலிசார் உடனடியாக கைது செய்து, அரசியல்
தலையீடுகளுக்கு அப்பால் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த பாடத்தை
அவர்களு;குப் புகட்ட வேண்டும் என்பது தான் சகல முஸ்லிம்களினதும்
வேண்டுகோளாகும். எனவே மனித நேயம் இந்நாட்டில் அழிந்து விடாமலிருக்க
அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடியாக இவ்வன்முறைகளை
அரங்கேற்றியவர்களையும் அதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த முக்கிய
நபர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கின்றோம். மேலும் மக்கள் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கின்ற நீதியை அரசியல் தலையீட்டினால் குழி தோண்டிப்
புதைத்து விட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

இறுதியாக கொடூரகமாக ஷஹீதாக்கப்பட்ட முஹம்மத் முஹிதீன், மற்றும்
முஹம்மத் மாஹிர் ஆகியோரது மரணத்தால் துயருற்றிருக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும், தவ்ஹீத் சகோதரர்களுக்கும் ஆறுதலை அகில இலங்கை
தவ்ஹீத் கூட்டமைப்பு கூறிக் கொள்கின்றது. அத்துடன் அவர்களுக்கு
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உன்னத சுவனத்தை வழங்கவும்,
காயமடைந்தவர்களுக்கு விரைவில் சுகம் கிடைக்கவும் அல்லாஹ்விடம்
பிராரத்தனையும் புரிகின்றது. மேலும் இக்கட்டான இவ்வேளையில் பொறுமை
காக்குமாறும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களையும் கேட்டுக்
கொள்கின்றோம்.


அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் மதனி,
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின்(ஐயுவு)
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்