இஸ்லாமிய நம்பிக்கையும் கோட்பாடும்

வினா :
நகத்தை, முடியை வெட்டுவதற்கு வியாழக்கிழமையை
குறிப்பாக்கியும் ஒரு பாடத்தை ஆரம்பிப்பதற்கு ஓர்
ஆசிரியரிடம் புதன் கிழமையைக் குறிப்பாக்கியும் அதில்
பறகத் இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாரே புதன்
கிழமையில் நகம் வெட்டினால் குஷ்டரோகம் வரும் என்றும்
பேசிக் கொள்கின்றனர். இது பற்றிய இஸ்லாமிய நம்பிக்கை
என்ன?

விடை:
இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். காலத்தைப்
படைத்த அல்லாஹ் காலத்திற்கு என்று எந்த ஆற்றலையும்
கொடுக்கவில்லை. நல்லதையும் கெட்டதையும் அவனே
படைக்கின்றான். அவன் அனுமதியின்றி அணுவும் அசையாது
என்றே ஒரு முஸ்லிம் நம்பவேண்டும்.

என்றாலும் அந்த அல்லாஹ்இ இந்த இந்த நேரங்களில்
இன்னின்ன விடயங்களைச் செய்யுங்கள், அல்லது
செய்யாதீர்கள் என்று கூறியிருந்தால் அல்லாஹ்
கட்டளையிட்டான் என்பதற்காக அவனுக்கு வழிபடுமுகமாக
அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த விடயங்களில் அவ்வாறு எந்த ஏவலோ,
விலக்கலோ அல்லாஹ்விடமிருந்து வரவில்லை, ஆயினும்
வியாழக்கிழமையில் நகம் வெட்டுவது சம்மந்தமான சில
ஆதாரமற்ற பலஹீனமான செய்திகள் கூறப்பட்டுள்ளது.

அவற்றை நாங்கள் நம்ப வேண்டிய அவசியமும் இல்லை, நம்பவும்
கூடாது.

இது போன்று ஷவ்வால் மாதத்தில்
திருமணம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கை நபிகளார்
காலத்தில் இருந்தது. அந்த பிழையான நம்பிக்கையை
மக்களிடமிருந்து அகற்றுவதற்காக 'நபி (ஸல்) அவர்கள்
ஆயிஷா (ரழி) அவர்களை ஷவ்வாலிலேயே திருமணம் செய்து
ஷவ்வாலிலேயே குடும்ப வாழ்க்கையை இன்னும் இரண்டு
வருடத்தின் பின் ஆரம்பித்தார்கள்'  

எனவே ஒரு நேரத்தை, ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டி
யாராவது ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்கோ அல்லது
அதை விட்டும் விலகுவதற்கோ கூறினால் அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் அவ்வாறு கட்டளையிட்டார்களா? என்று
அதற்கான ஆதாரத்தைக் கேளுங்கள்.

இல்லையென்றால் அது வெரும் மூடநம்பிக்கையாகும். அதை
நம்புவதும் அதன் அடிப்படையில் செயற்படுவதும் சிலவேளை
இஸ்லாத்தை விட்டே எங்களை வெளியேற்றிவிடும்.
Answered by Ansar Thablighi