சந்தேகங்களும் தெளிவுகளும் (ஒரு குழந்தை பிறந்த
நிமிடம் முதல் பல்வேறு காரியங்களை எமது முஸ்லிம்
பெண்கள் மேற்கொள்கின்றனர். இவற்றில் எவை
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை? எவை
நிராகரிக்கப்பட்டவை?)
சந்தேகம்:

ஒரு குழந்தை பிறந்த நிமிடம் முதல் பல்வேறு காரியங்களை எமது
முஸ்லிம் பெண்கள் மேற்கொள்கின்றனர். இவற்றில் எவை மார்க்கத்தில்
அனுமதிக்கப்பட்டவை? எவை நிராகரிக்கப்பட்டவை என்று பிரித்தறிவது
பெரும் குழப்பமாக உள்ளது. மிக விரைவில் பிரசவத்தை
எதிர்பார்த்திருக்கும் எனக்கு தெளிவான தீர்வைத் தந்தால்
பேருதவியாக இருக்கும்.

பர்வின் நியாஸ், அல்-அமீன் வீதி, புதிய காத்தான்குடி.06

தெளிவு:

அழ்ழாஹ்வின் பேரருளால் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தின்
எழுச்சியால் மக்கள் இன்று அதிகளவு தெளிவு பெற்று வருகின்றார்கள்.
இருந்தபோதிலும், அந்நிய மதக் கலாச்சாரங்களும், சடங்கு
சம்பிரதாயங் களும், மூட நம்பிக்கைகளும் எமது சமூகத்தில் வாழத்தான்
செய்கின்றன.

அவ்வாறான மௌட்டீகங்களில்  குழந்தையின் பிறப்போடு
தொடர்புள்ளவைகளை தனியாக பட்டியலிடுகின்ற அளவுக்கு அவைகள்
மிகைத்திருக் கின்றன.

அழ்ழாஹ்வோ, அவனது தூதரோ காட்டித்தராத காரியங்களையே இங்கு
அடையாளப்படுத்துகின்றோம்.

1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)
வேண்டும்.

2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.

3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.

4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.

5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை
நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.

6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல்
சுற்றுவது.

7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.

8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி
சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.

9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப்
பேசுவது.

10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.

11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.

12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.

13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த
இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.

14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.

15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார்
அனைவருக்கும் விருந்தளிப்பது.

16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.

17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து
பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.

18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை
நீங்குமென்று நம்புவது.

19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க
ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி
விடுவது.

20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக்
குடிக்கக் கொடுப்பது.

21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக
நம்புவது.

22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக்
கோர்த்து வைப்பது.

23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து
விழாக் கொண்டாடுவது.

24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.

இவை தவிர இன்னும் பல சடங்குகள் குழந்தை பிறந்தது தொடர்பில்
நிறைந்திருப்பதை கண்கூடாகக் காணு கின்றோம். இடத்திற்கு இடம்
இவைகள் சில நேரங்களில் மாறுபடுகின்றன.

அழ்ழாஹ்வும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தராத
இந்நடவடிக்கைகளை மார்க்க அறியாமை காரணமாக இன்று முஸ்லிம்களில்
அதிகமானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஏன் இவற்றை செய்கின்றீர்கள்? எனக் கேட்டால் எங்கள் முன்னோர்கள்
இதனை மிகச் சிறப்பாகச் செய்து வந்தார்கள் என வரட்டுத் தத்துவம்
பேசுகின்றனர். இவர்களின் இந்த வாதத்தை இறைவன் அல்குர்ஆனில்
பின்வருமாறு கண்டிக்கின்றான்.

‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம்
கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே
பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள்
எதையும் விளங்காமலும் நேர்வழி    பெறாமலும் இருந்தாலுமா? (அவர்கள்
பின்பற்று வார்கள்?);’ (அல்குர்ஆன் 2:170)

எல்லாம் வல்ல அழ்ழாஹ் மூடநம்பிக்கைகளை விட்டு எம்மனைவரையும்
காத்தருள்வானாக
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்